உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் 19வயது ஐஐடி – ஜேஇஇ ஆர்வலர் உயிரிழந்ததற்கு பாக்டீரிய தொற்று காரணமாக இருந்ததை தொடர்ந்து ஸ்க்ரப் டைபஸ் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வகை காய்ச்சல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தலைவலி, இருமல், மூச்சு திணறல் போன்றவை இதன் அறிகுறிகள். ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் உண்டாகும் இந்நோய் உயிருக்கு ஆபத்தானதாகும். இத்தொற்று விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, நோய்த்தொற்றின் அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு தொடங்கும்.
நோய்த்தொற்றின் அறிகுறிகள்: காய்ச்சல் மற்றும் குளிர், தலைவலி, உடல்வலி, மற்றும் தசைவலி, சிகர் கடித்த இடத்தில் ஒரு இருண்ட சிரங்கு போன்று இருக்கும், மன மாற்றங்கள், குழப்பங்கள் முதல் கோமா வரை ஆகும்.
இதுகுறித்து, இமாச்சல பிரதேச சுகாதாரத்துறையின் செய்திதொடர்பாளர் கூறியதாவது, ஒரு நபர் மூட்டுகளில் வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது பிடிப்புகள் இருந்தால் உடலில் விறைப்பு அல்லது உடல் உடைந்து கட்டிகள் இருப்பது போல் உணர்ந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது மலேரியா, டெங்கு காய்ச்சலுடன் அறிகுறிகளை கொண்டுள்ளது என்று குருகிராமில் உள்ள ஃபோடிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தொற்றுநோய் ஆலோசகர் மருத்துவர் நேஹா ரஸ்தோகி தெரிவித்துள்ளார். மேலும் இது சுவாசம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
தடுப்பு நடவடிக்கை: இந்த நோய்க்கு தடுப்பூசி இல்லை என்றாலும், ஆபத்தான பாக்டீரியாவுடன் ஒருவர் தொடர்பு கொள்ளாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம் தொற்று ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்கலாம்.புதர்கள் மற்றும் தாவரங்கல் அதிகம் உள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது.பூச்சி விரட்டிகளை பயன்படுத்துதல் மற்றும் வீடுகளை சுற்றி புதர்கள் அண்டாமல் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.