விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன்-சின்னபாப்பா தம்பதி. இவரது மகன் பாஸ்கர் (33) சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் காலை இழந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மனைவி சங்கீதா தான், கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், வேலைக்கு போகும் இடத்தில் சங்கீதாவுக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த மாமியார் சின்னபாப்பா சங்கீதாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினமும் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மருமகள் சங்கீதா, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மாமியாரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த கொலை வழக்கில் மருமகள் சங்கீதாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.