மின் கட்டண விபரம், SMS அனுப்பப்படும் என்பதால் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் சரியாக இருக்கிறதா என அப்டேட்’ செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
வீடுகளில், ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் துவக்கப்பட உள்ளது. வீடு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இந்த மீட்டரில் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தி, அலுவலக, ‘சர்வர்’ உடன் இணைக்கப்படும். கணக்கெடுக்க வேண்டிய தேதி மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும். அந்த தேதி வந்ததும் தானாகவே மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும். எவ்வளவு மின் கட்டணம் என்ற விபரம், நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும்.
விவசாயம், குடிசை வீடு தவிர்த்த மற்ற அனைத்து பிரிவுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க மின்வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது.தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்து, இந்தாண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது மின் வாரியத்திடம், 2.20 கோடி மின் நுகர்வோர் மொபைல் எண்களை பதிவு செய்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொபைல் போன் எண்ணை பதிவு செய்த நுகர்வோர்களில் சிலர், அந்த மொபைல் எண்ணை மாற்றிய நிலையில், புதிய எண்ணை வாரியத்திடம் வழங்காமல் உள்ளனர். எனவே, மின் நுகர்வோர்கள் தங்களின் மொபைல் போன் எண்ணை சரிபார்த்தும், ஏற்கனவே வழங்கிய எண்ணை மாற்றியவர்கள் புதுப்பித்தும் கொள்ள வேண்டும்.
இதனால், மின்சாரம் தடை செய்யப் படும் இடம், மின் கட்டணம் உள்ளிட்ட மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்புகள் எஸ்.எம்.எஸ்., வாயிலாக பெறலாம். மொபைல் எண்ணை புதுப்பிக்க விரும்புவோர், ‘www.tangedco.org’ இணையதளத்திற்கு சென்று, ‘பில்லிங் சர்வீஸ்’ பகுதியில், ‘மொபைல் எண் அப்டேட்’ பகுதிக்கு செல்ல வேண்டும்.மின் இணைப்பு எண், புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார்’ எண் என, ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை பிரிவு அலுவலகங்களில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறினார்.