தமிழ் சினிமாவில் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகும் ‘கூலி’ திரைப்படம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமாக தயாராகிறது. இந்தப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது தற்போது திரையுலகை திருப்பி பார்க்க வைத்திருக்கிறது. ‘கூலி’ திரைப்படத்தை இயக்குவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ஏற்கனவே ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா , ஸ்ருதி ஹாசன், அமீர் கான் மற்றும் உபேந்திர ராவ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் தற்போது பேரு பொருளாகியுள்ளது. இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் பெற்றுள்ள சம்பளமே ரூ.150 கோடியாகும். அதேபோல், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவிடம் பேசிய லோகேஷ், “ரஜினி சாரின் சம்பளத்தைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்றாலும், கூலி படத்துக்காக நான் 50 கோடி ரூபய் சம்பளமாக வாங்கியிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் இயக்கியிருந்த லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது. அதனால்தான் எனது சம்பளம் இரண்டு மடங்கு ஆனது.
நான் ரூ.50 கோடிக்கு தகுதியானவன் என்று நினைக்கிறேன்; நான் அதற்கு வரி செலுத்தப் போகிறேன், மேலும் எனது வாழ்க்கையின் இரண்டு ஆண்டுகளை இந்த படத்திற்காக மட்டுமே சென்றுவிட்டன. இது ரூ.400 கோடி படம். இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில், என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் உதவுவேன் என்றார்.
மேலும், கூலி படத்தில் ரஜினியை நடிக்க வைப்பதைவிடவும் நாகார்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்கத்தான் ரொம்ப சிரமப்பட்டேன். அவர் என்னிடம், ‘நான் ஏன் வில்லனாக நடிக்க வேண்டும்’ என கேட்டார். பிறகு பலமுறை நேரில் சென்று அவரை சந்தித்து இந்த கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொள்ள வைத்தேன்” என்றார்.
கூலி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் மூலம் ரூ.130 கோடியும், சார்லைட் உரிமைகள் மூலம் ரூ.90 கோடியும், இசை உரிமைகள் மூலம் ரூ.20 கோடியும் வசூலித்துள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கூலி படம் ரஜினிகாந்தின் 171வது படமாகும், இது தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டது.
Read more: டைப் 2 நீரிழிவு நோய்க்கு தனிமை ஒரு காரணமா..? – எச்சரிக்கும் புதிய ஆய்வு முடிவுகள்