தமிழ்நாடு மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், அதற்கான டெண்டரையும் அரசு கோரியுள்ளது. மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூ டூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல், மற்றொரு வசதியையும் மின்துறை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியானது. அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விவரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள். மின் கட்டண விவரம் நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விவரம் தெரிவிக்க புது “மொபைல் செயலி” அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாம்.
இந்நிலையில், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதாவது, மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில், புது செல்போன் செயலியை, மின்வாரியம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்போது, தொழில் மற்றும் வணிகப் பிரிவில் 61,000 இணைப்புகள் உள்ளன. இவற்றில் மாதம்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது.
ரீடிங் எடுக்க செல்லும் மின்வாரிய ஊழியர்களின் செல்போன்களில் இந்த செயலி பதிவேற்றம் செய்யப்படும். இவை தவிர, ஒவ்வொருவருக்கும் ஆப்டிக்கல் கேபிள் வழங்கப்படும். அந்தக் கேபிளை மின்சார மீட்டர் மற்றும் செல்போனுடன் இணைத்து பிறகு செல்போன் செயலியை இயக்கியதும் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாடு கட்டண விவரம், கட்டுப்பாட்டு மைய சர்வருக்கு உடனே சென்று விடும். அங்கிருந்து அந்த விவரம் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்படும்.
செல்போன் செயலியில் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் பரிசோதனை அடிப்படையில், 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா 5 பிரிவு அலுவலகங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. அந்த அலுவலகங்களின் உதவிப் பொறியாளர்கள், செல்போன் செயலி மூலமாக தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில், வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுத்தனர். அந்த விவரங்கள் துல்லியமாக பதிவாகின. இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதால், ஒரு மாதத்திற்குள்ளேயே அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் செல்போன் செயலியில் மின்பயன்பாட்டை கணக்கெடுக்க வேண்டும் என்று மண்டலப் பொறியாளர்களுக்கு, மின்வாரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மின் வாரியத்திடம், 2.20 கோடி மின் நுகர்வோர் மொபைல் போன் எண்களை பதிவு செய்துள்ளார்களாம். அதுமட்டுமின்றி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் துவக்கப்பட உள்ள நிலையில், மின் கட்டண விபரம், எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். இதற்காக, தங்களின் பதிவு செய்த செல்போன் நம்பர் சரியாக இருக்கிறதா என்பதை, அப்டேட் செய்து கொள்ளுமாறு நுகர்வோரை, மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.