உலகின் நம்பர் 1 சதுரங்க வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் பிரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டியின் நான்காவது சுற்றில், வெள்ளை காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தா தனது பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டியில், உலக சாம்பியன் கார்ல்சன் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த நிலையில், லெவன் அரோனியனிடம் டை பிரேக்கரில் தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார். இது சதுரங்க உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்ஞானந்தா மட்டும் அல்ல, மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியும் தனது பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆனால் விதித் குஜராத்தி போட்டியிலிருந்து வெளியேறியதோடு, அவரது செயல்திறன் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
2022-ஆம் ஆண்டு ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கார்ல்சனை முதன்முறையாக வீழ்த்தி, உலகின் கவனத்தை ஈர்த்த பிரக்ஞானந்தா, தற்போது தொடர்ந்து அவருக்கு பெரும் சவாலாக உருவாகி வருகிறார். அப்போது16 வயதான பிரக்ஞனந்தா கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியராக (விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா பிறகு) பெருமை பெற்றார். சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரிலும் வெற்றி பெற்று, உலக தரவரிசையில் முதல் 5 இடங்களில் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.
Read more: நடிகரும், இயக்குநருமான வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!