எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1.18 லட்சம் மருத்துவ இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 12.36 லட்சம் பேர் கலந்துகொள்கின்றனர். இதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் 28 வரை தங்கள் விவரங்களை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
மாணவர்களின் தரவரிசைப் பட்டியலின் படி, ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதனைத் தொடர்ந்து ஜூலை 31 இல் இறுதி ஒதுக்கீட்டு ஆணை மாணவர்களுக்கு வழங்கப்படும். பிறகு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதிக்குள் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாவது கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதியும், மூன்றாவது கட்ட மருத்துவக் கலந்தாய்வு செப்டம்பர் 22 ஆம் தேதியும் தொடங்கும் என அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.