நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் அரசியல் தலையீடு இல்லாமல் சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, ”விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் சீமான் மீதான வழக்கின் விசாரணையில் சுணக்கம் அடைந்துள்ளது. அதனை தீவிரப்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சியின் தலைவராக உள்ள சீமான், ஆண்-பெண் சமத்துவம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், விஜயலட்சுமி புகார் பற்றி வெளிப்படையாக பேசாமல் கேவலப்படுத்தி வருகிறார். விஜயலட்சுமி குறித்து மிக மோசமான வீடியோக்களை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனை சீமான் கண்டிக்க வேண்டும்.
விஜயலட்சுமி அப்போது அச்சுறுத்தல் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நீதி வேண்டும் என போராடுவதால் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் காவல்துறை விசாரணை நடத்தி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.