ஸ்பெஷல் மசாஜ் என்று ஆசைவார்த்தை கூறி ஐடி ஊழியரை வரவழைத்து நகை, பணம் ஆகிவற்றை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் கோபால்நகர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது செல்போனில் மசாஜ் சென்டர் குறித்து தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உள்ள வீட்டில் ஸ்பெஷல் மசாஜ் சென்டர் புதிதாக திறந்திருப்பதாகவும், சலுகைகள் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
இதனை நம்பி கார்த்திக்கும் மசாஜ் செய்வதற்காக அந்த இடத்திற்கு ஆசையாக சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இருவர் கதவை திறந்து கார்த்திக்கை உள்ளே தள்ளி கதவை பூட்டிக் கொண்டனர். பின்னர் அவரை ஒரு அறையில் கை, கால்களை கட்டிப்போட்டு செயின், மோதிரம் மற்றும் அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.
மேலும், அந்த கும்பல் கிரெடிட் கார்டை வாங்கிச் சென்று ரூ.2 லட்சத்தை ஏடிஎம் மூலம் எடுத்து கொண்டு அவரை விரட்டி அடித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கார்த்திக் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.