பிரியாணி சாப்பிடச் சென்ற வாலிபரை ஓட்டல் ஊழியர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்திரயான் குட்டாவைச் சேர்ந்தவர் லியாகத் (30). இவர், நேற்று நள்ளிரவில் பஞ்சாகுட்டாவில் உள்ள ஓட்டலுக்கு நண்பருடன் சென்று பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கும், ஓட்டல் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்ற ஊழியர்களும் தகராறில் ஈடுபட்டதால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
அப்போது ஓட்டல் ஷட்டரை மூடிவிட்டு லியாகத் மற்றும் அவரது நண்பரை ஊழியர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் லியாகத் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது நண்பர் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று லியாகத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.