சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.
மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அதன்படி, இந்த 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 105 சாட்சிகளில் 52 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கலாம் என நீதிமன்றத்தில் சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து 52 பேரிடம் தற்போது வரை சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது. இருப்பினும், ஸ்ரீதர் 7வது முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முத்துக்குமரன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ‘ குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். ‘அரசு, காவல் துறைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து, மற்ற போலீசார் சம்பவத்தின் போது செய்த செயல்கள் குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
‘தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்’ என, குறிப்பிட்டுள்ளார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஜூலை 24ல் ஸ்ரீதர் ஆஜராக வேண்டும். அன்று சி.பி.ஐ., மற்றும் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல் எதிரியாக ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: உயரப் போகிறதா அரசுப் பேருந்து கட்டணம்…? அமைச்சர் சொன்ன புதிய தகவல்…!