சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். கடந்த ஜூன் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 70 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வரும் நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 10 இடங்களில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்துடன் தொழில்முறையில் தொடர்புடைய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.