அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு தொடர்பாக பேசியதை கண்டித்து அவருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என்று கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் குறித்து தான் சொன்னது சரிதான். நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது” என பாஜகவுக்கு பதிலடி கொடுத்தார். இருந்தும் அண்ணாமலை முதல் மத்திய அமைச்சர்கள் என பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சனாதனத்திற்கு எதிராகப் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனாதனத்திற்கு எதிராகப் பேசுபவர்களின் நாக்கை பிடுங்குவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “சனாதனத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவரது நாக்கை பிடுங்குவோம். சனாதனத்தின் பக்கம் யார் கண்ணை உயர்த்தினாலும், ஒவ்வொரு கண்ணையும் விரலை வைத்து எடுப்போம் என பேசியுள்ளார். அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வன்முறை தூண்டும் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரே மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசலாமா?. அப்போது பிரதமர் வன்முறையை ஆதரிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.