முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை வெளியே சொல்ல ஆள் இல்லை.. ஆனால் நெஞ்சுரத்தோடு எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற பெயரில் திமுக அரசின் நிர்வாக திறனற்ற, சர்வாதிகார நடவடிக்கையை உண்மை தோலுரித்துக் காட்டும் ஒரே தலைவராக இருக்கிறார்.. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.. மக்கள் பேரலையாக ஆதரவுக் கொடுக்கின்றனர்..
மக்கள் நிதியை அரசு கஜானாவில் சேர வேண்டிய நிதி, ஆட்சியாளர்களின் வீட்டுக்கு செல்வதை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்.. மின்சாரக் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என தமிழகத்தில் அவல நிலை இருக்கிறது.. மக்களை ஏமாற்றுவதில் முதல்வர் ஸ்டாலின் கின்னஸ் சாதனை படைத்து வருகிறார்.. முதல்வர் ஸ்டாலினின் பொய்களை எடப்பாடி பழனிசாமி தோலுரித்துக் காட்டுவதால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.. 2026-ல் அதிமுக ஆட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து தவெக, நாதகவிற்கு எடப்பாடி அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ திமுகவின் எதிர்ப்பு என்பதே முக்கியம்.. அதிமுக பிரதான கட்சி திமுகவை எதிர்க்கிறோம்.. தவெக எதிர்க்கிறார்கள்.. நாம் தமிழர் எதிர்க்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் என எல்லோருமே திமுகவை எதிர்க்கிறார்கள்.. எதிர்க்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் அந்த நோக்கம் நிறைவேறும்..
நமக்கு நோக்கம் நிறைவேற வேண்டும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.. திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மாற்றுக்கருத்து இருந்தாலும் கூட்டணியில் இருக்கின்றனர்.. உண்மையிலேயே மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் எடப்பாடி பழனிசாமி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகிறார்.. ” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ கட்சியில் மீண்டும் இணைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு காலம் கடந்துவிட்டது.. இனி அதற்கு வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார்.. இனி அதுகுறித்து பேச எதுவும் இல்லை.. திமுகவை எதிர்ப்பது என்பது எங்கள் பிரதான நோக்கம்.. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.. புலி வேட்டைக்கு செல்லும் போது, அணில், குயில்களுக்கு கவனம் செலுத்தினால், புலி வேட்டையில் குறி தப்பிவிடும்.. எடப்பாடியார் குறிவைத்தால் அது தப்பாது.. நிச்சயமாக வெல்வார் என்பது தான் மக்களின் தீர்ப்பு..” என்று தெரிவித்தார்.
Read More : குடை ரெடியா வச்சுக்கோங்க.. வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! – IMD கொடுத்த வார்னிங்