இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கையை வசதியாக்கி வந்தாலும், அதே நேரத்தில் அதைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அரசு, காவல்துறை மற்றும் வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கைகள் வழங்கி வந்தாலும், மோசடிக்காரர்கள் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி” தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி வருகிறது.
பெங்களூருவில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் தனது தோழியுடன் சமீபத்தில் தாய்லாந்திலிருந்து திரும்பியிருந்தார். அந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டு, அந்த இருவருக்கும் ஒரு வீடியோ அழைப்பு (video call) மூலம் தொடர்பு கொண்டார். அவர்களுக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக திடீர் குற்றச்சாட்டு கூறி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என மிரட்டினார்.
அந்தப் பெண்கள் தாங்கள் எந்த விதத்திலும் குற்றத்தில் ஈடுபடவில்லை என விளக்கியும், அந்த நபர் கேள்விகளை நிறுத்தவில்லை. மாறாக, அவர்களது அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்ற பெயரில், இரண்டு பெண்களையும் 9 மணி நேரம் வரை நிர்வாணமாக வீடியோ காமரா முன்னே அமர வைத்துள்ளார். பாத்ரூம் கூட செல்ல அனுமதிக்கவில்லை. இது மனநலத்தையும், உரிமையையும் கடுமையாக பாதிக்கும் செயலில் ஒன்றாகும்.
மிரட்டல்களுக்கிடையே, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.58,477 பணமும் பிடுங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இது போலிஸாரால் நடத்தப்படும் விசாரணை என நினைத்த அவர்களால், உண்மையை உணரும்போது ஏமாற்றம் கடுமையாக இருந்தது.
தற்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மர்ம நபரை பிடிக்க தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். நவீன தொழில்நுட்ப தடயங்களை (digital footprints) பயன்படுத்தி குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுமக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை: இந்தச் சம்பவத்தின் பின்னணியில், போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், அரசுத் தரப்பிலிருந்து நேரடியாக வீடியோ கால் மூலம் அழைப்பு வராது. நிர்வாணப்படுத்தி விசாரணை செய்யும் அதிகாரம் போலீசாருக்கு கிடையாது. எந்த ஒரு நபரும் உங்களை மிரட்டி பணம் கேட்பது சட்ட விரோதம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய அழைப்புகள் வந்தால் உடனடியாக 112 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
Read more: பாமக – தவெக நிர்வாகிகள் இடையே மோதல்.. போலீசார் முன்னிலையில் அடித்துக்கொண்டதால் பரபரப்பு..!!