டெல்லியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளாக்காடாக மாறியது.. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால் டெல்லி மக்கள், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்ல சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.. அந்த வகையில் அனுராதா திவாரி பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. மழைக்காலங்களில் மிகவும் பரிச்சயமான காட்சியாக, தண்ணீரில் மூழ்கிய பள்ளத்தில் இருந்து தனது பைக்கை மீட்க போராடும் ஒரு பைக் ஓட்டுநரை இதில் பார்க்க முடிகிறது..
கணிசமான அளவு வரிகளை செலுத்திய போதிலும், சாக்கடை நீரில் தான் பைக் ஓட்ட வேண்டுமா என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இந்த மனிதர் தினமும் அலுவலகம் செல்கிறார்.. 30% சம்பள வரி, பைக்குகளுக்கு 28% ஜிஎஸ்டி, 8-15% சாலை வரி, காப்பீட்டில் 18% ஜிஎஸ்டி மற்றும் 60% எரிபொருள் வரி.. இதையெல்லாம் செலுத்திய பிறகு, கழிவுநீர் நிரம்பிய சாலையில் உள்ள பள்ளத்தில் அவரது பைக் சிக்கியுள்ளது. அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிக அளவு வரி செலுத்தினாலும், மழைக்காலங்களில் போதுமான வடிகால் அமைப்புகள் மற்றும் சாலை பழுதுபார்ப்புகள் இல்லாதது வழக்கமான பயணங்களை கடினமான சவால்களாக மாற்றுகிறது. வரி வருவாய்க்கும் பொது சேவை வழங்கலுக்கும் இடையிலான இந்த முரண்பாடு நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது, இதனால் குடிமக்கள் தங்கள் நிதி பங்களிப்புகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் உறுதியான முன்னேற்றங்களாக மாறுகின்றனவா என்று யோசிக்க வைக்கிறது.. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்..
ஒரு பயனர் “ சம்பளம், எரிபொருள், காப்பீடு, சாலை, ஏன் மிதிவண்டிக்கும் கூட இவ்வளவு அதிக வரி செலுத்திய பிறகு, ஒரு சாதாரண குடிமகன் இதற்குத் தகுதியானவரா? குழிகள், கழிவுநீர் நிறைந்த சாலைகள், அன்றாடப் போராட்டம்? உண்மையான கேள்வி என்னவென்றால்: வரிப் பணம் எல்லாம் எங்கே போகிறது? குடிமக்கள் வரி செலுத்தி அமைதியாக துன்பப்பட வேண்டுமா? வெறும் கோஷங்களுக்கு மட்டுமல்ல, பதில்களுக்கும் உண்மையான உள்கட்டமைப்புக்கும் நாம் தகுதியானவர்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
வரிகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதியளிக்கும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு, ஆனால் உண்மை அது இல்லை.. குறிப்பாக டெல்லி போன்ற நகரங்களில், தண்ணீர் தேங்குவதும், பள்ளங்கள் உருவாவதும் தொடர் கதையாகி வருகின்றன… இந்த வீடியோ சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு முறையான தோல்வியையும் கோடிட்டு காட்டுகிறது…