குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழகம் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ள நிலையில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்கப்பட்டதா என்பது குறித்த எஸ்எம்எஸ் பயனாளர்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அதனைப் போலவே பயனாளிகளின் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி வரவு வைக்கப்பட்டது. இதனை பயனாளர்கள் அனைவரும் உடனே சரிபார்த்துக் கொள்ளும் படியும் ஒரு வேளை எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் ரேஷன் கடைகள் அல்லது இ சேவை மையத்திற்கு நேரில் சென்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதிக்கு பிறகு இந்த திட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல் முறையீடு செய்யலாம் எனவும் அதன் பிறகு 30 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.