டெங்கு வைரஸின் புதிய DEN2 மாறுபாடு சற்று ஆபத்தானது என்றும் இது பாதிப்பு உறுதியானால் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் படிப்படியாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸின் DEN-2 மாறுபாடு காரணமாக தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நொய்டாவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் இந்த மாறுபாடு சமீபத்தில் கண்டறியப்பட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, DEN-1 திரிபு தலைவலி, காய்ச்சல், சளி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது, ஆனால் DEN-2 அதிக காய்ச்சல், வாந்தி போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.
டெங்கு வைரஸின் இந்த புதிய மாறுபாடு ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 என மொத்தம் 4 வகை டெங்கு வைரஸ்கள் உள்ளன என்றும் ஆனால் இவற்றில் DEN-2 இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது மிகவும் தீவிரமான மாறுபாடு என்று கூறும் நிபுணர்கள், இது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலை கூட ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். DENV-2 டெங்கு மாறுபாடு பல உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் இந்த வகை டெங்கு பாதிப்பு உறுதியானால் ஆபத்து சற்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ரத்தக்கசிவு காய்ச்சலால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்: அதிக காய்ச்சல், குமட்டல், வாந்தி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு வலி தொடர் தலைவலி ஏற்படும். தடுப்பு நடவடிக்கைகள்: முழு கை ஆடைகள் அணிய வேண்டும், சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள், தண்ணீர் தேங்கக்கூடாது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுங்கள், நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்.