2024ம் ஆண்டை இந்தியா மட்டுமல்ல உலகமே மறக்க முடியாத அளவுக்கு நடந்த இயற்கை பேரிடர் சம்பவத்தில் வயநாடு நிலச்சரிவும் ஒன்று. மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கை கொடுத்த வேகத்தடையாக அமைந்துவிட்ட வயநாடு நிலச்சரிவு கிட்டத்தட்ட 298 உயிர்களை பலிகொண்டது. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னுமும் கூட தெரியவில்லை.
மிக அழகிய ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளே நிலச்சரிவின் மையம். நிலச்சரிவு ஏற்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு 204 மி.மீ., மழையும் அதற்கடுத்த 24 மணிநேரத்தில் 372 மி.மீ மழையும் பெய்ததே இந்த மோசமான பேரழிவிற்கு காரணமாக அமைந்துவிட்டது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்படும் சூரல்மலை கிராம மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்தது பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிவிட்டது.
தரையில் பெய்தாலே தாங்காது; மலையில் பெய்தால்…. மழையால் உருண்டோடிவந்த வெள்ளத்தின் ஆற்றல் பன்மடங்கு பெருகி காட்டாற்று வெள்ளமாக வழியில் இருந்த வீடுகளையெல்லாம், வேரோடு அடித்துச்சென்று அருகில் இருந்த சாளியாற்றில் தள்ளியது. அங்கு ஒரு இருந்தது என்பதற்கு ஒரு சில கட்டிடங்களே மீதமிருந்தன.
அதாவது கடந்த ஆண்டு இதே நாள் (ஜூலை 30) இரவு நிலச்சரிவு ஏற்பட்டபோது கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது காட்டாற்று வெள்ளம்போல கட்டடங்கள் நிலச்சரிவில் உருண்ட சப்தம் பேரிடியாக கேட்டுள்ளது. அடுத்தநாள் செவ்வாய் அன்று விடிந்தபோதுதான் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளே காணாமல் போய்விட்ட தகவல் மக்களுக்கு தெரியவந்தது. சாலைகள், வீடுகள் என மக்கள் வாழ்ந்த பகுதியே தடமில்லாமல் நிலச்சரிவில் அழிந்து போனது, உயிர்தப்பியவர்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து, நேரம் செல்ல செல்ல, மண்ணுக்குள் இருந்து தோண்ட தோண்ட சேறும் சகதியுமாக உடல்கள் கொத்து கொத்தாக மீட்கப்பட்டன. ஆகஸ்ட் 1ம் தேதி 144 ராணுவ வீரர்கள் சேர்ந்து 190 அடி நீளமுள்ள பாலத்தை 31 மணிநேரத்தில் கட்டி முடித்தனர். இதனால் இருவஞ்சிபுழா ஆற்றை கடந்து சூரல்மலையிலிருந்து முண்டக்கை செல்ல பேருதவியாக இருந்தது. ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், நவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்திய விமானப்படை தேடுதல் பணியில் இணைந்தது. மேம்படுத்தப்பட்ட ரேடார் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
பூமியை துளைத்தெடுக்கும் கருவிகளும் கொண்டுவரப்பட்டன. பல மாநிலங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் குவிந்தனர். ஆழத்தில் புதைந்த உடல்களை கண்டுபிடிக்கும் கருவிகளும் உடல்களை தேடி எடுத்தன. உலக நாடுகளில் இருந்தும் மக்களுக்காக நிவாரணங்கள் குவிந்தன. இந்தநிலையில், இந்த பேரழிவு சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆனால், அந்த இயற்கை அரக்கனின் கொடூர செயலால், நாட்டு மக்கள் இன்றளவும் மீளா துயரிலேயே உள்ளனர்.
Readmore: “நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர்… கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்…!