திருப்பதியில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையில் “ திருப்பதி கோயிலில் சில இளைஞர்கள் ரீல்களுக்காக குறும்புத்தனமான செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களை உருவாக்குவது, திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் கோவிலின் வளாகத்தில் நடனங்கள், ஆட்சேபனைக்குரிய போஸ் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியிடுகின்றனர். இது பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று TTD தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆன்மீக சூழலைப் பராமரிப்பது தங்கள் முக்கிய பொறுப்பு என்று கூறிய TTD அதிகாரிகள், இதுபோன்ற வீடியோக்கள் கோவிலின் புனிதத்தை கேலி செய்வதாகக் கடுமையாகக் கண்டித்தனர். ஸ்ரீவாரி கோயில் மற்றும் மாட வீதிகளில் இதுபோன்ற ரீல்களை உருவாக்கியவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வ வழக்குகளைப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
TTD விஜிலென்ஸ் துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கோயில் வளாகத்தில் 24/7 கண்காணிப்பைப் பராமரித்து வருகின்றனர். வீடியோ எடுக்க முயற்சிக்கும் எவரையும் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கோவில் வளாகத்தில் ஆன்மீகத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய்படும்.. அபராதங்கள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு ஆன்மீக சூழல், புனிதம் மற்றும் கண்ணியத்தை குறைக்கும் வகையில் ரீல்கள் தயாரிக்கப்படுவது குறித்து TTD கவலை தெரிவித்துள்ளது.
ரீல்கள் மீதான தடையுடன் வாகனக் கட்டுப்பாட்டிலும் TTD அதிகாரிகள் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். திருமலையில் பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க, சிறப்பு பார்க்கிங் மற்றும் ப்ரீபெய்ட் டாக்சிகளை நிறுவ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.
திருப்பதியில் ஒவ்வொரு அடியும் அர்ப்பணிக்கப்பட வேண்டும், ஆனால் ஆன்மீகத்தை கேலி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்று TTD எச்சரித்துள்ளது. திருமலையில் ஆபாசமான வீடியோக்கள் மற்றும் ஆபாச செயல்களின் ரீல்களை உருவாக்காமல் திருமலையின் ஆன்மீக சூழலையும் தூய்மையையும் பாதுகாப்பதில் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று TTD வேண்டுகோள் விடுத்துள்ளது.