தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது.. ஆனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்..
மேலும் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தரப்பில் மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.. ஆகஸ்ட் 17-ம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநாடு நடக்க உள்ளது.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்..
இந்த முறை அதிமுகவிடம் 40 தொகுதிகள் வரை பாஜக கோர உள்ளதாக கூறப்படுகிறது.. ஏனெனில் தினகரனின் அமமுகவிற்கும் உள் ஒதுக்கீடு மூலம் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.. எனவே அமமுகவுக்கும் சேர்ந்தே பாஜகவுக்கு தொகுதி பங்கீடு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது..
தற்போது தமிழக பாஜக தரப்பில் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதற்காக நயினார் நாகேந்திரன் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. மேலும் யார் யாருக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் என்பதையும் கேட்டறிந்து வருகிறார்..
அதன்படி நயினார் நாகேந்திரன் அண்ணாமலை உடன் பேசியுள்ளார். அப்போது இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று அண்ணாமலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.. ஏற்கனவே அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அது உண்மையாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இன்னும் சில நாட்களில் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல் என 2 முறை அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.. எனினும் இரண்டு தேர்தல்களிலும் அவர் தோல்வியையே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..