ஒவ்வொரு உறவும் நாம் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நட்பு மட்டுமே நம்மை தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு. காலப்போக்கில் இந்த உறவு நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் மாறும். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நம் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லக்கூடிய ஒரு உறவு தான் நட்பு, எது, சரி தவறா என்று பார்க்காமல் ஒவ்வொரு கஷ்டத்திலும் தோளோடு தோல் நிற்கும் ஒரு உறவு தான் நட்பு. இந்த ஒரு உறவு தான் நம்மை எல்லா சிரமங்களில் இருந்து வெளியே இழுக்கிறது. ஆகையால், இந்த நட்பின் உறவை கொண்டாட, சர்வதேச நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சர்வதேச நண்பர்கள் தினம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டு நண்பர்களின் முக்கியத்துவம் சிறப்பாக கொண்டாடும். எந்த சூழ்நிலையிலும், நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்கள்தான். கடினமான காலங்களிலும் கூட அவர்கள் நமக்கு ஆதரவாக எப்போதும் இருப்பார்கள். வயது, நிறம், ஜாதிக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு எதுவென்றால், அது நட்பு தான். நட்பானது குடும்பம் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளின் மூலம் ஆதரவையும் அன்பையும் தோழமையையும் வழங்குகிறது. இந்த நாள் இந்த சிறப்பு உறவுகளை மதிப்பதற்கும் நிபந்தனையின்றி நம்முடன் எப்போதும் இருக்கும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நினைவூட்டலாகும்.
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது. நட்பு தினத்தின் தோற்றம், 1935 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸின் தீர்மானத்தில் இருந்து தொடங்குகிறது, அமைதி மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்காக ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை தேசிய நட்பு தினமாக அமெரிக்கா நியமித்தது. பின்னர், ஹால்மார்க் அட்டைகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால், வாழ்த்து அட்டைகளுடன் இந்த கருத்தை வணிகமயமாக்கினார், இது பிரபலமடைய உதவியது.
பின்னர் ஐநா சபை ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினத்தை தீர்மானம் மூலம் அதிகாரப்பூர்வமாக நிறுவிய போதிலும், கலாச்சார வசதி மற்றும் வார இறுதி கொண்டாட்டத்திற்காக இந்தியா தனது சொந்த தேதியை ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையாக தக்க வைத்துக் கொண்டது. சர்வதேச நட்பு தினம் உலகளாவிய ஒற்றுமை மற்றும் அமைதியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்தியாவின் பதிப்பு தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் சமூக கொண்டாட்டங்களை வலியுறுத்துகிறது. இந்தியாவைப் போலவே வங்கதேசம், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினத்தைக் கொண்டாடுகின்றன. இருப்பினும், பராகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் ஜூலை 20 அன்று அதைக் கடைப்பிடிக்கின்றன.