விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை 31-ல் வெளியான திரைப்படம் ‘கிங்டம்’ படம். தற்போது 80 கோடி வரை வசூலித்துள்ளது. இத்திரைப்படம் கதை இலங்கை தமிழர்களை அடிப்படியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களை இழிவுப்படுத்தும் ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபாகும். இது மிகப் பெரும் மோசடி.
வரலாற்றில் ஒரு நாளும் நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டி, இலங்கை தமிழர்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது. கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த் தேசியன் இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
இலங்கை போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்தும் தமிழினத்தின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு போர்க் குற்ற விசாரணை நடத்தக் கோரியும், இலங்கை தமிழர்களிடம் தனி நாடாக பிரிந்து செல்வதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் பன்னாட்டு மன்றத்தில் இன்று வரை போராடி வருகிறோம்.
எங்களது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்த மாண்பையும், இலங்கை தமிழர்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, ‘கிங்டம்’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப் படத்தைத் தடுத்து நிறுத்துவோம்” என்று சீமான் எச்சரித்துள்ளார்.
Read more: செக்…! ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம்… இனி கட்டாயம்… பத்திர பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!