“ஒரு அணையாவது கட்டியுள்ளாரா..?” அன்புமணியின் கேள்விக்கு லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்..!!

durai

பாமக தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என தமிழ்நாடு முழுக்க நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வேலூர் மாவட்டத்திற்குச் சென்ற அன்புமணி, “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?” என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், அன்புமணிக்கு அமைச்சர் துரைமுருகன் ஆதாரங்களோடு பதில் கொடுத்துள்ளார்.


இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், “பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அன்புமணி, தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யாவை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக்விஜயம் செய்யப் புறப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை. ஆனால், இந்த திக்விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்.

அவர் பேசுகிறபோது, என்மீது ஒரு சிறிய பாசமழையைப் பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளைக் குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியைக் குறித்துக் கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?” என்று முழக்கமிட்டிருக்கிறார்.

அன்புமணி, கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார். கலைஞர், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதுதான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், பாலாற்றில், இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல், கவுண்டன்யாநதியில், ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பொன்னையாற்றில், பரமசாத்து- பொன்னை குகையநல்லூர், பாம்பாற்றில், மட்றப்பள்ளி,

ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில், கரியகூடல், அகரம் ஆற்றில், கோவிந்தப்பாடி, மலட்டாற்றில், நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில், பெரியாங்குப்பம், கன்னாற்றில், சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன். இந்த ஆண்டு, அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

Read more: கிங்டம் படத்தைத் திரையிடக்கூடாது.. உடனே நிறுத்துங்கள்.. இல்லையென்றால்..? எச்சரிக்கை விடுத்த சீமான்.. என்ன காரணம்..?

English Summary

“Has anyone built a dam?” Minister Durai Murugan responded to Anbumani’s question with a list.

Next Post

பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்...!!

Tue Aug 5 , 2025
Actor Shanavas, son of Prem Nazir passes away at 71
prem nazhir

You May Like