உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் இன்று தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில், இராணுவத்தின் ஹர்ஷில் முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகாசியிலுள்ள தாராலி கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது..
இந்த நிலச்சரிவில் ஒரு கிராமமே மொத்தமாக அடித்து செல்லப்பட்டது.. துதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்தனர்.. கிட்டத்தட்ட 50 பேர் செல்லப்பட்டனர். மேலும் குடியிருப்பு வழியாக குப்பைகள் மற்றும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இங்கு காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ராணுவம் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்..
இந்த நிலையில் இந்த பகுதியில் 10 நிமிடங்களுக்குள் மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுவரை, 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் ஹர்ஷிலில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன, சிக்கியிருக்கக்கூடியவர்களைக் கண்டுபிடிக்கும் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ராணுவம் உறுதியளித்துள்ளது.
தாராலியில் ஏற்பட்ட மேக வெடிப்பு, பாகீரதியில் பாயும் கீர் கங்கா அல்லது கீர் காத் நதி எனப்படும் உள்ளூர் ஓடையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டது. மேகவெடிப்பு காரணமாக இந்த நதியின் நீர்மட்டம் உயர்ந்து, திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. ஹர்சிலுக்கு அருகிலுள்ள இந்த ஓடையில் நீர்மட்டம் உயர்ந்து தராலியில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக உத்தரகாசி காவல்துறை தெரிவித்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
மத்திய மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படைகள் மற்றும் மாநில அரசு உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளன. உத்தரகாசி மாவட்ட நிர்வாகம், உதவி தேடுபவர்கள் 01374222126, 222722, 9456556431 என்ற எண்களை அழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 01374-222722, 7310913129 அல்லது 7500737269 என்ற எண்களை அழைக்குமாறு ஹரித்வாரில் உள்ள மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், டேராடூனில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை 0135-2710334, 0135-2710335, 8218867005 அல்லது 9058441404 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர் கனமழை எச்சரிக்கைகளுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், அங்கன்வாடிகளும் புதன்கிழமை மூடப்படும் என்று உத்தரகாசி நிர்வாகம் அறிவித்துள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கி அறிவிப்புகளை வெளியிடுமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தாராலி கிராமத்தில் சுமார் 40 முதல் 50 சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக முதன்மைச் செயலாளர் ஆர்.கே. சுதான்ஷு தெரிவித்தார். சாலை இணைப்பைப் பாதித்த ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். “நாங்கள் Bஅதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அணுகலை மீட்டெடுப்பது எங்கள் முன்னுரிமை,” என்று அவர் கூறினார். மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் அடிப்படையிலான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் சாத்தியமில்லை, ஆனால் SDRF மற்றும் ராணுவக் குழுக்கள் களத்தில் உள்ளன. நிலைமை சீரடையும் போது கூடுதல் தகவல்களைச் சேகரிக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.