மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், ஊட்டச்சத்து, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட வசதிகளை கட்டணமின்றி மத்திய அரசு அளித்து வருகிறது.
தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைத்துள்ள மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்ப குழுவின் அறிக்கையின்படி 2011-ம் ஆண்டு முதல் 2036-ம் ஆண்டுக்கு இடையேயான காலகட்டத்தில் மொத்த மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேல்) விகிதம் 2011-ம் ஆண்டில் 10 கோடியாக அதிகரித்த நிலையில், 2036-ம் ஆண்டில் 23 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 8.4 சதவீதத்திலிருந்து 14.9 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மூத்த குடிமக்களின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடல் மூத்த குடிமக்கள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தை 01-04-2021 முதல் அமல்படுத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கான இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்தி வரும் மற்றும் பராமரித்து வரும் அரசுசாரா மற்றும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது.
மேலும் தங்குமிடம், ஊட்டச்சத்து, மருத்துவ உதவி, பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் மூத்த குடிமக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. நாட்டில் தற்போது 696 மூத்த குடிமக்கள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.