நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவனை 5 சிறார்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது மாணவன், அங்குள்ள பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கூனியூர் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்ததாக கூறப்படுகிறது.
இது மாணவியின் அண்ணன் 12 ஆம் வகுப்பு மாணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால், 11 ஆம் வகுப்பு மாணவரை தாக்குவதற்கு உறவுக்கார சிறுவர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, செவ்வாய்க்கிழமை அன்று சேரன்மகாதேவியில் உள்ள 11 ஆம் வகுப்பு மாணவரின் வீட்டிற்கு, சிறுமியின் அண்ணன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மாணவரை வீடு புகுந்து தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில், படுகாயடைந்த மாணவரை மீட்ட உறவினர்களான, சேரன்மகாதேவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்க, அவருக்கு தொடர்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, மாணவனை தாக்கிய சிறுமியின் அண்ணன் உட்பட ஐந்து சிறார்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 சிறார்களும் பாதிக்கப்பட்ட மாணவனுடன் ஒரே பள்ளியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சேரன்மகாதேவி பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்களுக்கு இடையில் பள்ளியில் நண்பர்களுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறு தொடர்ந்து எதிர் தரப்பு மாணவருடன் சேர்ந்து 11ஆம் வகுப்பு மாணவனை சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் முற்றிலும் நண்பர்களுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு. இந்த சம்பவத்தினை சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதல் என்று தவறாக தகவல்கள் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே பல சமூகத்தை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறது. சமூக ரீதியான முன் விரோதத்தில் இச்ச சம்பவம் நடைபெறவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.