பாமக நிறுவனர் ராமதாஸ், மீண்டும் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுனரான ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டி தீவிரமடைந்துள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் என அறிவித்தார். ஆனால் அன்புமணியோ பாமக தலைவராக தான் நீடிப்பதாகவும் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இருவரும் மாறி மாறி கட்சி தலைவர்களை நியமித்தும் நீக்கியும் வருகின்றனர்..
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. மேலும் “ பாமகவை என்னிடம் இருந்து பறிக்க அன்புமணி சூது செய்து வருகிறார்.. அவரை எம்.பியாக ஆக்கியதில் இருந்தே, எனக்கு தெரியாமல், கட்சியில் பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வந்தார்.. என் மீது பிரியமாக இருந்தவர்களை பணம் கொடுத்து அன்புமணி தன் பக்கம் இழுத்தார்.. அவர்களை என்னை பார்க்கவிடாமல் தடுத்தார்.. இதெல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாது.. ஆனால் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது.. அதனால் தான் பேசுகிறேன்..
அன்புமணிக்கு அதிகாரம் இருக்கிறது என்று பொய் வார்த்தைகளை சொல்லி, பலரை தன் பக்கம் இழுந்தார்.. அவர் கூசாமல் பொய் வார்த்தைகளை சொல்வார்.. 46 ஆண்டுகாலம் கட்சியை கட்டிக் காத்தது நான் தான்.. கடுமையாக உழைத்து, தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலமரமாக வளர்த்தேன்.. என் வியர்வையில் இந்த கட்சி பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது..
ஆனால் அந்த மரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி, கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட அன்புமணி முயற்சிக்கிறார்.. நான் வளர்த்த இந்த கட்சியை இப்படி செய்வது, வாய் கூசாமல் பல பொய் சொல்வது, பணம் கொடுத்து ஆட்களை விலைக்கு வாங்குவது என அவர் செய்து வருகிறார்.. கட்சி தொடர்பாக நான் எது அன்புமணி கேட்பதில்லை…. என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம்.. மிகச்சிறந்த கல்வி கொடுத்தேன், எம்.பி, மத்திய அமைச்சர் என ஆக்கி அழகு பார்த்தேன்.. எல்லா பொறுப்புகளையும் கொடுத்தோம்.. கஷ்டப்பட்டு உழைத்த கட்சியை அன்புமணி அழித்துக் கொண்டிருக்கிறார்..” என்று தெரிவித்தார்..