உயிர் போகும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் மூர்க்கத்தனமாக அஜித்தை தாக்கி உள்ளனர் என்பது புதிய எஃப்.ஐ.ஆர் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது..
இந்த நிலையில், அஜித் குமார் கொல வழக்கில் திருத்தி அமைக்கப்பட்ட எஃப்.ஐ.ஆர் வெளியாகி உள்ளது.. அதன்படி உயிர் போகும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் மூர்க்கத்தனமாக அஜித்தை தாக்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அந்த எஃப்.ஐ.ஆரில் “ 9 சவரன் நகையை காணவில்லை என்று நிகிதா அளித்த புகாரின் பேரில், அஜித்குமாரின் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. பின்னர் அஜித் குமார் விடுவிக்கப்பட்ட நிலையில் மறு நாள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. மானாமதுரை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் அஜித்குமாரை விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர்..
ஜூன் 27-ம் தேதி இரவு முதல் 28-ம் தேதி மாலை வரை தனிப்படை போலீசார் 5 பேரும் அஜித் குமாரை ஒரு தோப்பில் வைத்து விசாரித்துள்ளனர்.. பின்னர் சம்பவ இடமான கோயில் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டையில் வைத்து அஜித்தை பிளாஸ்டிக் பைப்பால் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதனால் அஜித்குமாருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அஜித்குமார் குற்றத்தை ஒப்புக் கொள்ளாததாலும், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாலும் தனிப்படை போலீசார் கோபத்தில் கடுமையாக தாக்கி உள்ளனர்.. இந்த தாக்குதல் காயமடைந்த அஜித்குமார் முதலில் திருப்புவனம் மருத்துவமனைக்கும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.. ஆனால் 28-ம் தேதி இரவு 11 மணியளவில் அஜித் குமார் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்..
அஜித்குமார் தனது குற்றத்தை மறுத்து தங்களை அலைக்கழிப்பு செய்வதாக எண்ணி தனிப்படை போலீசாருக்கு ஏற்பட்ட திடீர் கோபம் காரணமாகவும், அவரை அடித்து உண்மையை வர வைக்க வேண்டும் எனவும், ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்து 5 தனிப்படை காவலர்களும் அஜித்குமாரை கொடூரமாக தாக்கி கொலைக் குற்றத்தை புரிந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவருகிறது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..