முகத்தில் அதிகப்படியாக இருக்கும் ரோமங்களை நீக்க, புருவத்தின் வடிவை மெருகூட்ட, மேலும் அழகாக்க, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப்படுகிறது. புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். மிகவும் எளிமையான மற்றும் சில நிமிடங்களில் முடியும் இந்த அழகு சிகிச்சை, முக அழகை மேம்படுத்தி, பொலிவாக்கும்! ஆனால், த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய், லேசாக வீக்கமாகத் தெரியும். சிலருக்கு சில நாள் வரை எரிச்சலும் அரிப்பும் ஏற்படும்.
இந்தநிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஒரு பெண் த்ரெட்டிங் செய்ய பார்லருக்குச் சென்றதாகவும், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு சோர்வு, குமட்டல் மற்றும் கண்களில் மஞ்சள் போன்ற பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கல்லீரல் செயலிழந்து வருவது தெரியவந்தது. இதற்குக் காரணம் பார்லரில் செய்யப்பட்ட த்ரெட்டிங் ஆகும். இந்த வீடியோவைப் பார்த்த பலர், த்ரெட்டிங் கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்?
நூல் மூலம் த்ரெட்டிங் செய்வது பொதுவாக பாதுகாப்பான மற்றும் இயல்பான செயல்முறையாகக் கருதப்படுகிறது, ஆனால் அதில் பயன்படுத்தப்படும் நூல் மற்றும் பிற உபகரணங்கள் சுத்தமாக இல்லாவிட்டால், அது தோலில் சிறிய வெட்டுக்களை ஏற்படுத்தும். இந்த வெட்டுக்கள் வழியாக வைரஸ் உடலில் நுழைந்தால், தொற்று பரவக்கூடும். குறிப்பாக ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற வைரஸ்கள் பாதிக்கப்பட்ட இரத்தத்தின் மூலம் பரவக்கூடும்.
மேலும், த்ரெட்டிங்கின் போது ஏற்படும் தொற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது படிப்படியாக கல்லீரலை சேதப்படுத்தும். நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாத தொற்று சிரோசிஸ் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற நோய்கள் மற்றும் தொற்றுகளைத் தவிர்க்க, எப்போதும் தூய்மையைக் கவனிக்கும் ஒரு பார்லரில் த்ரெட்டிங் செய்யுங்கள். அந்த பார்லரில் புதிய மற்றும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நூலைப் பயன்படுத்த வேண்டும், த்ரெட்டிங் செய்வதற்கு முன்னும் பின்னும் சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும், மேலும் அழகு சிகிச்சையாளரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். தோலில் ஏற்கனவே ஏதேனும் வெட்டு, சொறி அல்லது தொற்று இருந்தால், த்ரெட்டிங் செய்வதைத் தவிர்க்கவும்.