2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. திமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பயணத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார். கடந்த இரு மாதங்களாக அவர் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் செய்துவருகிறார்.
இதனிடையே கட்சியின் நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசும் ‘உடன் பிறப்பே வா’, ‘ஓரணியில் தமிழ்நாடு’ உள்ளிட்ட தேர்தல் பணிகளை திமுக மேற்கொண்டுவருகிறது. மறுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
திமுக அதிமுகவை தொடர்ந்து தேர்தல் சுற்றுப்பயணத்திர்கு தயாராகியுள்ள நயினார் நாகேந்திரன் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் பதிவெண்ணிலேயே பிரேத்யேகமாக வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளது அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. அரியலூர் பாஜகவின் முன்னாள் தலைவர் ஐயப்பன், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரச்சார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக பிரத்யேகமாக தயார் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் எண் இது என்பதை அறிந்தவுடன், நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அவரே வாகனத்தை இயக்கி திருநெல்வேலி மாநகரை வலம் வந்துள்ளார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நயினார் நாகேந்திரன் அதிமுகவின் மூலம் அரசியல் அடையாளம் பெற்றவர். வரும் 17 ஆம் தேதி நெல்லையில் தனது தேர்தல் பயணத்தை தொடங்கும் நயினார் அனைத்து தொகுதிகளிலும் எம் ஜி ஆர் ஸ்டைலில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more: நோட்..! வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்.15 வரை கால அவகாசம்…!