நாய் கடித்துக் குதறியதில் பச்சிளங்குழந்தை உயிரிழப்பு.. நாய்க்கடியால் ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலி… இப்படி தெரு நாய்களால் அவ்வப்போது நிகழும் மரணங்களும், உடற்காயங்களும் மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த, முதல்வர் மு.க. ஸ்டாலின், 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளை உருவாக்க உத்தரவிட்டார். மேலும், சென்னையில் 10 புதிய நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கவும் உத்தரவிட்டார்.
சமீபத்தில் கூட நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் நாய்களை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருணை கொலை செய்யப்பட்ட நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கால்நடை துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண சென்னை மாநகராட்சி, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் “மெகா ரேபிஸ் தடுப்பூசி” திட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 30 கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழு, நேரடியாக தெருக்களுக்குச் சென்று 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும். தினமும் சுமார் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்ட நாய்களுக்கு அடையாளமாக மை குறியிடப்படும்.