சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.. நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன..
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இரு மொழிக் கொள்கை தான் எங்கள் உறுதியான கொள்கை.. தமிழ், அங்கிலம் என இரு மொழிக் கொள்கை நம் கொள்கை.. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல.. பெருமையின் அடையாளம்.. அனைவருக்கும் கல்வி, உயர்தரமான கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்.. கல்வி அனைவருக்கும் பொதுவானது, அங்கு யாருக்கும் பாகுபாட்டுக்கே இடமில்லை.. பள்ளிகள் எல்லோருக்குமானது. அங்கு யாருக்கும் தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம். எதிர்காலத்திற்கு தேவையான தொலைநோக்கு பார்வை உடன் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இடம்பெறாது. பிற்போக்கு சிந்தனை இல்லாமல், முற்போக்காகவும், பகுத்தறிவாகவும் கல்வி இருக்கும்..” என்று கூறியிருந்தார்…
இந்த நிலையில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு, தனது வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பல கொள்கைகள், தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். மேலும், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து பல திட்டங்களை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வருடக் கல்வி ஆண்டும் தொடங்கி விட்டது. இன்னும் 7 மாதங்களில், திமுக ஆட்சியும் அகற்றப்படவிருக்கிறது.
3 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு, தற்போது இந்தக் கல்விக் கொள்கையை வெளியிடுவோம் என்பது, வெறும் விளம்பரம் இன்றி வேறென்ன? தமிழகம் முழுவதும், அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல பள்ளிகள் கட்டிடமின்றி மரத்தடியில் செயல்பட்டு வருகின்றன. திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
இவற்றை சரி செய்யாமல், வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் 2 மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என்று கூறுகிறார் முதலமைச்சர்.
பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் 2 மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது என்பதை, முதலமைச்சர்தான் கூற வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்..