உலகளவில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ரெட்மண்ட் வளாகத்தில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் மே 2025 முதல் வாஷிங்டன் பகுதியில் மட்டும் மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் உள்ள சில ஊழியர்கள் இதை ஒரு நெருக்கடி என்று விவரிக்கின்றனர்.
இந்த பணிநீக்கங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம், மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக கவனம் செலுத்துவதாகும். அந்நிறுவனம் கடந்த ஆண்டு AI உள்கட்டமைப்பில் 88 பில்லியன் டாலரை செலவிட்டது.. செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் $30 பில்லியன் முதலீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஒரு மூலோபாய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் என்று நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
மைக்ரோசாப்ட் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகளவில் அதன் பணியாளர்களில் மிகப்பெரிய அளவில் வேலை குறைப்புகளைச் செய்து வருகிறது. இதுவரை, பல்வேறு துறைகளில் இருந்து 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் எக்ஸ்பாக்ஸ், சட்டம், விற்பனை, பொறியியல் போன்றவை அடங்கும். கேமிங் பிரிவு குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ‘தி இனிஷியேட்டிவ்’ ஸ்டுடியோ மூடப்பட்டுள்ளது.. பல விளையாட்டு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு உள் குறிப்பில் பணிநீக்கங்களுக்கு பதிலளித்தார். “இந்த முடிவுகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் எடுக்கப்பட்டன. இது எங்கள் நீண்டகால அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். ஆனால் வணிகக் கண்ணோட்டத்தையும் எதிர்கால இலக்குகளையும் மனதில் கொண்டு நாம் முன்னேற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கடந்த காலாண்டில் மைக்ரோசாப்டின் நிகர லாபம் 18% அதிகரித்து $25.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற நேரத்தில் நிறுவனத்தின் பணிநீக்கங்கள் ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. வலுவான நிதி நிலையில் இருந்தபோதிலும், ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனத்தின் முடிவை பலர் விமர்சித்து வருகின்றனர்.
Read More : “நட்பின் சந்திப்பு.. SCO உச்சிமாநாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம்” சீனா அழைப்பு..