நாட்டின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பல புதிய மாற்றங்கள் அமலாக உள்ளது. அதில், பொதுமக்கள் முடிக்க வேண்டிய பல விஷயங்களும் உள்ள நிலையில், அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாமினி பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய நாமினியை தேர்வு செய்ய வேண்டும். அதனால், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் உங்கள் கணக்குகளில் நாமினியை சேர்க்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், உங்கள் கணக்குகள் முடக்கப்படும் அபாயம் உள்ளது.
சேமிப்பு கணக்கு:
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா மற்றும் தபால் நிலைய வைப்புத் தொகை என சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். செப்.30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடித்திருந்த வேண்டும்.
2000 ரூபாய் நோட்டுக்கள்
இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த நோட்டுகள் செல்லாது. எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
டிசிஎஸ் விதிகள்:
மத்திய அரசு டிசிஎஸ் கட்டணங்களை 5% இருந்து 20%ஆக உயர்த்தியது. கிரெடிட் கார்டுகளின் மூலம் உங்கள் வெளிநாட்டு செலவுகள் 7 லட்சம் ரூபாயை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 20% டிசிஎஸ் செலுத்த வேண்டும். அதே சமயம் மருத்துவமனை, கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டிசிஎஸ் 5 சதவீதமாக வசூல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கு
மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே இந்த கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். செப்.30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.