இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேர்தல் முறையில் ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்டு வரும் நோக்கில், இந்திய முழுவதும் அல்லது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாததற்காக, 334 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPS) தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டை சேர்ந்த 22 ககட்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காததுடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் அவற்றின் அலுவலகங்கள் இல்லை என கண்டறியப்பட்டது. இது தவிர, இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தகவல்களைப் புதுப்பிக்காததையும், எந்தவொரு செயல்பாடுகளும் இல்லாததையும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீக்கப்பட்ட கட்சிகள்:
அகில இந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அனைத்து இந்தியப் பெண்கள் ஜனநாயக சுதந்திரக் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம், அப்பா அம்மா மக்கள் கழகம், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி, இந்திய மக்கள் வெற்றிக் கட்சி, காமராஜர் மகாஜனத் கட்சி மக்கள் நீதி கட்சி- இந்தியா, மீனவர் மக்கள் முன்னணி, நல்வழிக் கழகம், தேசிய அமைப்பு காங்கிரஸ், தேசியவாத தொண்டு காங்கிரஸ், புது வாழ்வு மக்கள் கட்சி, பசும்பொன் மக்கள் கழகம், சமூக மக்கள் கட்சி, தமிழ் மாநில கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், இளைஞர் மற்றும் மாணவர் கட்சி உள்ளிட்ட 22 கட்சிகள் இதில் அடங்கும்.
தற்போது இந்தியாவில் மொத்தம் 2,854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், 334 கட்சிகள் நீக்கப்பட்ட பிறகு 2,520 கட்சிகள் மட்டுமே மீதமுள்ளன. இருப்பினும், நாட்டில் 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் செயலில் உள்ளன.
இந்த நடவடிக்கை 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RP Act) பிரிவு 29A இன் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு கட்சி குறைந்தது 6 ஆண்டுகளில் ஒரு முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் மற்றும் அதன் பெயர், முகவரி மற்றும் பொறுப்பாளர் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பது அவசியம்.
2025 ஜூன் மாதத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEOs) 345 கட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதில் 334 கட்சிகள் விதிமுறைகளை மீறியதாகத் தெரியவந்தது. அவர்களுக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டு, சிலரிடம் நேரடியாக விளக்கமும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சலுகைகள் ரத்து – மேல்முறையீடு செய்யலாம்:
RP சட்டத்தின் பிரிவுகள் 29B மற்றும் 29Cன் கீழ், இந்தக் கட்சிகளுக்கு இருந்த நன்கொடை மற்றும் வரிவிலக்கு போன்ற பல நன்மைகள் இப்போது கிடைக்காது. எனினும், இந்த முடிவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நடவடிக்கை, தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக பொறுப்புணர்வை மேம்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.