சினிமாவில் அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது உடல் எடைக் குறைப்பு பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித டயட் மற்றும் மருந்துகள் இல்லாமல், கடுமையான கார்டியோ பயிற்சிகளின் மூலம் சுமார் 9 கிலோ எடையை குறைத்துள்ளார்.
ஆனால், இது வேகமாக எடைக் குறைய உதவியிருந்தாலும், அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். உடல் நலம் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, ஆரோக்கியமான முறையில் எடையை பராமரிப்பதே சிறந்தது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “2019இல் நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன். மிகவும் பருமன் என்று சொல்ல முடியாது. அப்போது நான் அதிகமாக கார்டியோ செய்தேன். அதிகமாக கார்டியோ செய்தால், தசைகள் குறையும். நான் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் செய்யாமல், கார்டியோ மட்டும் செய்ததால் எனது உடல் எடை வேகமாக குறைந்தது. அப்போது என் முகம் மிகவும் கூர்மையாக மாறியது. புகைப்படங்களில் பார்த்தால், முகம் மிகவும் ஒல்லியாக இருந்தது.
அந்த காலத்தில் தனது வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக இல்லை. அப்போது நான் உடற்பயிற்சி செய்யவே இல்லை. சாப்பிடுவது, வேலைக்கு செய்வது, வீட்டுக்கு வந்ததும் தூங்குவது. இதைத்தான் தினமும் செய்து வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை :
கார்டியோ உடற்பயிற்சிகள் என்பது நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை தான். இவை கலோரி எரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறந்த பயிற்சிகள். ஆனால், ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் இல்லாமல் அதிக அளவில் கார்டியோ செய்வது தசை குறைவுக்கு காரணமாகும். தசை அளவு குறைந்தால், மெட்டபாலிசம் வேகம் குறையும் மற்றும் உடல் வலிமை குறையும்.
நிபுணர்கள் பரிந்துரைப்படி, வாரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று நாட்கள் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் செய்தால், உடல் அமைப்பு சமநிலையாகவும் தசை உறுதியாகவும் இருக்கும். ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங் என்பது தசை வலிமையை அதிகரிக்க செய்யப்படும் உடற்பயிற்சி. இது பொதுவாக எடை தூக்குதல், உடல் எடை பயிற்சிகள் ஆகியவை ஆகும்.
வாரத்தில் 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர கார்டியோ பயிற்சி அல்லது 75 முதல் 150 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதோடு எடைப்பயிற்சியும் இணைத்துக் கொள்ள வேண்டும். வயது, தசை அளவு, தினசரி செயல்பாடுகள் போன்ற பல அம்சங்கள் கலோரி எரிப்பு அளவை பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Read More : தினசரி அசைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்..? இதயநோய், கல்லீரலுக்கு பெரும் ஆபத்து..!!