தமிழ் சினிமாவில் “டாப் ஸ்டார்” என்ற பட்டத்தை வென்றவர் என்றால், பலருக்கு நினைவில் வருவது நடிகர் பிரசாந்த் தான். 1990களில் தொடங்கி 2000களின் ஆரம்ப காலகட்டம் வரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டு வந்தவர் பிரசாந்த். இவர், பிறந்தது சினிமா குடும்பத்தில் என்றாலும், தனது திறமைகளால் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார்.
அவரது தந்தை தியாகராஜன், இயக்குநரும் நடிகருமானவர். ஆனால் பிரசாந்த், தந்தையின் ஆதரவை வெறும் பின்னணியாக வைத்துக்கொண்டு, தன் உழைப்பால், சினிமாவில் தனி முத்திரை பதித்தார். ஜீன்ஸ், வின்னர் போன்ற ஹிட் படங்கள் மூலம் திரையரங்குகளை நிரப்பிய பிரசாந்த், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள், அவரை திரையுலகில் இருந்து ஒதுக்கி வைத்தது. அதன் பின்னர் அவர் திரையில் தொடர்ந்து தோன்றவில்லை. திருமண வாழ்க்கையில் மனைவி கிரகலட்சுமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், அவர் மீது எதிர்மறையான புகார்களாக குவிந்தன. ஒரு கட்டத்தில் காவல்துறையிலும் புகாரளிக்கப்பட்டது. இந்த சமயத்தில் தான், அவருக்கு விவாகரத்தும் நிகழ்ந்தது. இதனால் திரை உலகில் முழுமையாக ஈடுபட முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
பிரசாந்தின் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார்கள் முன்வைக்கப்பட்டதாகவும், பிரசாந்தின் குடும்பம் இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு போராடியதாகவும், பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அந்த காலகட்டத்தில் பிரசாந்த் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. அவர்கள் மீது வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வர கடுமையாக போராடினார்கள். இறுதியில், உண்மை அவர்களுக்கே சாதகமாக முடிந்தது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், பிரசாந்த் தற்போது திரையுலகில் மீண்டும் நடித்து வருகிறார். அந்த வகையில், விஜய் நடித்த ‘GOAT’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு, ‘அந்தகன்’ படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.