இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.. நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எம்.பி.க்கள் பேரணியாக நடந்து சென்றனர்.. 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 300 பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொண்டதால் இன்று டெல்லியில் பரபரப்பு நிலவியது.. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்தது, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது வரை பல சம்பவங்கள் அரங்கேறின..
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, சஞ்சய் ராவத், சாகரிகா கோஷ், கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து பேசிய போது “அவர்களால் பேச முடியாது என்பதுதான் உண்மை. உண்மை நாட்டின் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும்.” என்று தெரிவித்தார்..
தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் நடந்த வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இன்று பேரணியை நடத்தி வந்தது. காங்கிரஸ் எம்பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) ராகுல் காந்தி தலைமையில், தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே இந்தியா கூட்டணியின் போராட்ட பேரணியை டெல்லி போலீசார் எதிர்கொண்டனர்.
இந்தியா கூட்டணி போராட்ட பேரணியின் போது ஒழுங்கை நிலைநிறுத்தவும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கவும் டெல்லி போலீசார் பணியாளர்களை நிறுத்தி, வழியில் பல இடங்களில் தடுப்புகளை அமைத்தனர்.
தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள சாலைகளில் கூடுதல் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் விரைவு எதிர்வினை குழுக்களும் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தன.
கடந்த வியாழக்கிழமை ராகுல் காந்தி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையம் “வாக்க திருட்டு” முறையைப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களின் வெளியிட்டார்.. மேலும் கர்நாடகாவில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் முகவரி, தந்தை பெயர் இல்லாமல் பலர் சேர்க்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.. ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சியினர் இந்த பேரணியை நடத்தினர்..
Read More : இந்திய ஜனநாயகத்தை பாஜக கொள்ளையடிக்கிறது.. இனியும் அமைதியாக இருக்க மாட்டோம்..!! – பொங்கியெழுந்த ஸ்டாலின்