சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவர், கணவர் ராமச்சந்திரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். பிரமிளாவின் இளைய மகன் முகில் (19) கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
மேலும், குடித்துவிட்டு தினமும் வீட்டு தகராறு செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு, வீட்டிற்கு போதையிலே வந்த முகில், தனது தாய் பிரமிளாவை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, நேற்று காலை வடபழனி காவல் நிலையத்தில் பிரமிளா சரணடைந்துள்ளார். அதாவது, “என்னுடைய மகன் முகில் என்னைக் கொலை செய்வதாக மிரட்டியதால், நான் கோபத்தில் நான் அவனை வெட்டிவிட்டேன்” என்று போலீசிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அங்கு இறந்து கிடந்த முகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், முகிலின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தது. எனவே, இந்த கொலையை பிரமிளா செய்திருக்க முடியாது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பார்த்தனர். அப்போது, பிரமிளாவின் மூத்த மகன் வசந்தகுமார் (30) மற்றும் அவனுடைய நண்பர் கண்ணன் சம்பவம் நடந்த இரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற காட்சிகள் பதிவாக இருந்தன. விசாரணையில், உண்மையில் முகிலை வெட்டிக் கொன்றது வசந்தகுமார் என்பதும், அவரை காப்பாற்றுவதற்காக தாய் பிரமிளா இந்த நாடகத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
முகில் குடிக்கு அடிமையானதால், தனது தாயை தினமும் தாக்குவதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், குடும்ப செலவுக்கு எந்தவொரு நிதி உதவியும் செய்யாமல் இருந்து வந்ததால், வசந்தகுமாருக்கு கோபம் வந்துள்ளது. எனவே, முகில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், வசந்தகுமார் தன்னுடைய நண்பன் கண்ணனை வீட்டிற்கு வரவழைத்து, முகிலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். மேலும், அவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க தாய் பிரமிளா, தானாகவே சென்று காவல்நிலையத்தில் குற்றத்தை ஏற்று சரணடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பிரமிளா, வசந்தகுமார் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.