நாக்பூரில் நடந்த ஒரு துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டியபடி ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று மதியம் தியோலாபர் காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மோர்பட்டா அருகே நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
கியார்சி அமித் யாதவ் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உதவி கேட்டு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் யாரும் உதவ முன் வராததால் தான் உதவியற்றவராக இருந்ததாக அவரது கணவர் அமித் யாதவ் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர், கடந்த பத்தாண்டுகளாக நாக்பூரின் கொராடிக்கு அருகிலுள்ள லோனாராவில் வசித்து வந்தனர். லோனாராவிலிருந்து தியோலாபர் வழியாக கரண்பூருக்கு தம்பதியினர் பயணித்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தனது மனைவியின் உடலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல வாகனமோ அல்லது உதவியோ இல்லாததால், மனமுடைந்த அமித் உடலை தனது பைக்கிலேயே, மனைவியின் உடலை கட்டி வீட்டிற்கு கொண்டு செல்ல முடிவை எடுத்தார்.
அமித் தனது மனைவியின் உடலை முதுகில் கட்டியபடி மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த உடன், ஆரம்பத்தில் யாரும் உதவ நிறுத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் உடலை அப்படி எடுத்துச் செல்வதைக் கண்ட பிறகு, பலர் உதவ முன் வந்தனர்.. எனினும் மோதல் அல்லது பிரச்சனைக்கு பயந்து அமித் அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டார்..
நெடுஞ்சாலை போலீசார், முதலில் அவரை நிறுத்துமாறு சைகை செய்தனர், ஆனால் அவர் தொடர்ந்து பைக்கில் சென்றார்.. இறுதியில் சிறிது தூரம் கழித்து அவர் நிறுத்தப்பட்டார், மேலும் போலீசார் கியார்சியின் உடலைக் கைப்பற்றினர். அது நாக்பூரின் மாயோ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
Read More : பாஜக தலைவரின் மனைவியிடம் தங்க செயின் பறிப்பு.. பட்டப்பகலில் துணிகரம்..!! – அதிர்ச்சி சிசிடிவி காட்சி..