நம் உடல் நலத்தை காக்க தினசரி நடைமுறைகள் மிக முக்கியமானவை. அந்த வகையில், காலை நேரத்தில் நாம் செய்யும் சில செயல்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையாக உள்ளன. பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் செய்வது பல் துலக்குவது தான். இது வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் ஒவ்வொரு நாளும் சுத்தமாக இல்லாவிட்டால், அது பலவிதமான கிருமிகளை பரப்பும். பலருக்கும் ஒரு பொதுவான பழக்கம் இருக்கும். அதாவதும் டூத் பிரஷை கழிவறை அருகே வைப்பது அல்லது கழிவறைக்குள் வைத்து பயன்படுத்துவது.
ஆனால், இந்த பழக்கம் பல நோய்களை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.. கழிவறை பயன்படுத்தப்படும் போது, அதன் சுற்றியுள்ள காற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவி, அங்கு உள்ள பொருட்களில் பதிந்துவிடும். இதனால் அந்த இடத்தில் வைத்திருக்கும் டூத் பிரஷும் கிருமிகளால் பாதிக்கப்படும்.
மேலும், சிலர் துலக்கிய பிறகு பிரஷை ஈரமாகவே வைத்துவிடுகிறார்கள் அல்லது மேல் மூடியைக் கட்டிவைக்கிறார்கள். இது அந்த இடத்தில் ஈரப்பதம் அதிகரிக்கவும், கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் விரைவில் வளரவும் காரணமாகிறது. எனவே, பல் துலக்கிய பிறகு டூத் பிரஷை நன்கு கழுவி, காற்றோட்டம் உள்ள உலர்ந்த இடத்தில் வைத்துவிடுவது மிகவும் நல்லது.
அதேபோல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய டூத் பிரஷை மாற்றிக் கொள்வதும் நல்லது. ஓரிரு மாதங்களில் தான் நம்மால் காண முடியாத அளவிற்கு பல கிருமிகள் அதன் நூல்களில் தங்கியிருக்கும். பழைய பிரஷை தொடர்ந்து பயன்படுத்துவது வாய்வழி நோய்களுக்கு வழிவகுக்கும். முக்கியமாக, டூத் பிரஷை கழிவறையில் வைப்பதை தவிர்த்து, சுத்தமான இடத்தில் வைத்தால், பல வகையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.