பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை நஜிமா, இன்று காலமானார்.. அவருக்கு வயது 77..
1964-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஜிமா பல ஹிந்தி படங்களில் ஹீரோ-ஹீரோயின்களின் சகோதரியாக நடித்துள்ளார். 1960 முதல் 70கள் வரை படங்களில் மிகவும் ஆக்டிவான நடிகைகளில் ஒருவராக அவர் இருந்தார்.. நஜிமா, ஹிந்தி சினிமாவில் ‘சகோதரி’ என்று அறியப்பட்டார். ஏனெனில் ஒரு காலத்தில் பாலிவுட்டில் சகோதரி என்றாலே நஜிமா என்று சொல்லும் அளவுக்கு சுமார் 50 படங்களில் சகோதரியாக நடித்தார்.. தனது இயல்பான நடிப்பின் மூலம் பல பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றினார். இதில் ‘ஆர்சூ’, ‘பீமான்’, ‘பிரேம் நகர்’ மற்றும் ‘அனுராக்’ ஆகியவை அடங்கும்.
நஜிமா பல படங்களில் அன்பான சகோதரியாகவும் நெருங்கிய தோழியாகவும் நடித்தார். இதன் காரணமாக அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது இந்த பிம்பத்தைத் தவிர, நஜிமா அனைத்து வேடங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு நடிகையாகவும் இருந்தார்.
தான் நடித்த காலக்கட்டத்தில் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டார். நிஷான் மற்றும் ராஜா அவுர் ருங்க் படங்களில் சஞ்சீவ் குமாருக்கு ஜோடியாக நடித்தார், ஹை தபசும் தேரா மற்றும் ஓ ஃபிர்கி வாலி போன்ற பிரபலமான பாடல்களை பாடினார்.
ராஜேஷ் கன்னாவுடன் அவுரத் மற்றும் டோலி போன்ற படங்களிலும் பணியாற்றினார்.. ஹிந்தி சினிமாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் அன்பான துணை நடிகர்களில் ஒருவராக ஒரு பாரம்பரியத்தை நஜிமா விட்டுச் சென்றுள்ளார்.. தனது பிற்காலத்தை தாதரில் தனது இரண்டு மகன்களுடன் கழித்து வந்தார்..
இந்த நிலையில் பழம்பெரும் நடிகை நஜிமா இன்று காலமானார்.. அவருக்கு வயது 77. அவரது மரணச் செய்தியை அவரது உறவினர் ஜரின் பாபு உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. நஜிமாவின் மரணம் குறித்து குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘நஜிமா இனி நம்மிடையே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவரின் மறைவு செய்தி பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..