கோயிலில் சுவாமி பெயருக்கு நாம் அர்ச்சனை செய்வது சரியானதா..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோவிலுக்கு அர்ச்சனை செய்ய செல்லும் போது, அர்ச்சகர் அல்லது சிவாச்சாரியார் உங்களின் பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை கேட்பது வழக்கம். அப்போது சிலர் தங்களது பெயரையும், ராசி மற்றும் நட்சத்திரத்தையும் கூறுவார்கள். சிலர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விவரங்களையும் தெரிவிப்பார்கள்.
அதேசமயம், சிலருக்கு ராசி, நட்சத்திரம் போன்றவை தெரியாது எனில், அவர்கள் பெயருடன் விஷ்ணு கோத்திரம் அல்லது சிவ கோத்திரம் என கூறுவது வழக்கம். இதையும் அர்ச்சகர் ஏற்று, அர்ச்சனை செய்து பிரசாதம் தருவார்கள். ஆனால், சிலர் அர்ச்சகர் “யாரின் பெயருக்கு அர்ச்சனை?” என்று கேட்டால், “சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள்” என்று கூறுவார்கள். இவ்வாறு செய்யப்படும் அர்ச்சனை முறையானதா? என்ற கேள்வி பலருக்கும் எழும்.
இறைவன் எந்த தேவையும் இல்லாதவன். யாரிடமும் எதையும் கேட்கும் நிலை அவனுக்கு இல்லை. அப்படியிருக்க, “சுவாமிக்கே அர்ச்சனை” என்று கூறுவது பொருளற்றதாகும். அர்ச்சனை என்பது, நம்முடைய பெயரைச் சொல்லி, நமக்காகவே இறைவனைத் துதி செய்து, நம் வேண்டுதல்களை அவனிடம் வைக்கும் ஒரு ஆன்மீகச் செயலாகும். எனவே, அர்ச்சனை செய்வதற்கான நேரத்தில், நம் பெயரையும், ராசி, நட்சத்திரத்தையும் கூறி செய்ய வேண்டும் என்பதே சரியான முறையாகும்.
நாம் இறைவனிடம் வேண்டுவது, நமக்குப் பயனுள்ளதாக இருக்குமென்று நம்பியே கேட்கிறோம். ஆனால், வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு நல்லதென தோன்றிய விருப்பங்கள், எதிர்காலத்தில் பிரச்சனைகளாக மாறும் என்பதும் உண்மைதான். நமக்கே நம் நலன் என்ன என்பது முழுமையாக புரிவதில்லை. அதனால் தான், இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் போது, “எனக்கு எது உகந்ததோ, அதையே தாரும்” என்ற மனநிலையோடு நம்மைப் பற்றியே அர்ச்சனை செய்வது சிறந்தது.
நம்மைவிட நன்றாகவே அறிந்தவன் இறைவன். நம்முடைய கடந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் அவனுக்கு தெரியும். நமக்குத் தேவையானதும், நம் நலனுக்கேற்ப ஏது என்பதும் தெளிவாக தெரியும். அதனால் தான், சிலர் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் போதும், “இது வேண்டும், அது வேண்டும்” என பட்டியல் போட்டு கேட்பதில்லை. மாறாக, “எனக்கு எது உகந்ததோ, அது நீ தானே அறிந்தவன். நீ விரும்பினால், உன் கருணையோடு அதை எனக்கு தா” என கேட்பார்கள்.
அதனால்தான், கோவிலுக்குச் செல்லும் பெரியோர்கள் “இது வேண்டும், அது வேண்டும்” என்று விருப்பங்களைத் தெரிவிக்க மாட்டார்கள். மாறாக, “நீயே எனக்கென்று ஏதாவது கொடுக்க விரும்பினால், அது உனது விருப்பப்படி கொடு” என்று இறைவனைப் போற்றி பாடிக் கொண்டு அமைதியாக திரும்பி விடுவார்கள்.
எனவே, கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யும் போது, நம்முடைய பெயரைச் சொல்லி நம்மக்காகவே அர்ச்சனை செய்ய வேண்டும். நமக்குள்ள குறைகள், வாழ்வில் வரும் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளும் நிலையில், இறைவனின் பெயருக்கே அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்குவது முறையாக இருக்காது.
Read More : இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!.. இந்தியாவில் தாக்கம்?. என்ன செய்யவேண்டும்?. என்ன செய்யக்கூடாது?