நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியில் இருந்து நகரம் நோக்கிச் செல்லும் வழியில், இயற்கை மலைகளால் சூழப்பட்ட ஓர் புனித தலம் தான் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். இது, கொல்லிமலை, அலவாய்மலை, நைனாமலை மற்றும் போதமலை என நான்கு மலைகளுக்கிடையே தன்னிச்சையாக விளங்கும் தனித்துவமான அம்மன் சன்னதியாக விளங்குகிறது.
பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில் விழா காலங்களில் மட்டுமே ‘கம்பம்’ நடப்படும். ஆனால், இந்த கோவிலில் தினசரி இருந்து வருகிறது. தனது கணவராக கருதப்படும் கம்பத்தை அம்மன் தினமும் நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தான், இந்த இடத்தை “நித்திய சுமங்கலி” என மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
முக்கியமாக, இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு, தங்கள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும், நீடித்த மகிழ்ச்சியும் அமையும் என்று நம்பப்படுகிறது. மேலும், இக்கோவிலில் முதலில் தரிசனம் தருவது சுயம்புவாக தோன்றிய அம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அருகில் யாளி வாகனம், பின்னால் நித்திய சுமங்கலி அம்மன் என இரு அம்மன்கள் இணைந்து அருள் புரிகின்றனர்.
குறிப்பாக, குழந்தை வரம் வேண்டுவோர், இங்கு விசித்திரமான முறையில் பிரார்த்தனை செய்வது வழக்கமாகும். ஐப்பசி மாத விழாவின் போது, கோவிலின் அம்மனுக்கு எதிரே உள்ள பழைய கம்பம் அகற்றப்பட்டு, புதிய கம்பம் நடப்படுகிறது. பழைய கம்பத்தை அங்குள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிட்டுச் செல்கின்றனர். இதனால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். மேலும், மாதந்தோறும் மகம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
அதேபோல், அம்மனுக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. புத்திர தடை உள்ள பெண்கள், இந்த ஊஞ்சலை ஆட்டி, வேண்டிக் கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், மனம் உருகி வேண்டினால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Read More : நோட்!. இந்த வாரத்தில் வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை!. எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்