தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஒரு பெயர் தான் பேசப்படுகிறது என்றால் அது கூலி திரைப்படமாகத்தான் இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருக்கும் இந்த மாஸ் காம்போ, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் டிமாண்ட், முதல் நாளே ஹவுஸ் புல், ஒரே நேரத்தில் டிக்கெட் வசூல் சாதனைகள் என இப்படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை கிளப்பியது.
தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனரும், தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் ரஜினிகாந்தும் இணைந்திருப்பதால் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில், நாகார்ஜுனா, பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் முன்பதிவிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கூலி படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் 9 மணிக்கு வெளியாகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் 6 மணிக்கே வெளியானது. அந்த வகையில், இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பயனர், “ஆரம்பம் முதல் முடிவு வரை சுனாமி போல் இருக்கிறது. ரஜினியை இதற்கு முன் இப்படி பார்த்ததே இல்லை. ஸ்கிரீன்ப்ளே மாஸாக இருக்கிறது. அனிருத்தின் இசை புல்லரிக்க வைக்கிறது. இப்படத்திற்கு 5-க்கு 4.5 மதிப்பெண் கொடுக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், முதல் பாதி மோசமான திரைக்கதையுடன் இருக்கிறது. படம் மந்தமாக செல்கிறது. ரஜினியை தவிர்த்து வேறு எந்த உற்சாக தருணங்களும் இல்லை. அனிருத்தின் இசை இப்படத்திற்கு பெரிதாக உதவவில்லை. 2ஆம் பாதி இன்னும் சிறப்பாக வேண்டும் லோகேஷ்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டில் இந்திய படங்களை சென்சார் செய்யும் குழுவில் இருக்கும் அதிகாரி உமைர் சந்து தன்னுடைய எக்ஸ் தள பதிவில், “தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு தனி மனிதரின் ஆட்சி தான் இந்த கூலி. ரஜினிகாந்த் மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மில் இருக்கிறார். கதை மற்றும் திரைக்கதை சுமாரானது தான். ஆனால், கிளைமாக்ஸ் மற்றும் கடைசி 20 நிமிடங்கள் தான் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். தியேட்டரில் மிஸ் பண்ணாம பாருங்க” என்று பதிவிட்டுள்ளார்.