நகரப் பகுதியில் புதிதாக சேமிப்பு கணக்கு திறக்கும் வாடிக்கையாளர்கள், மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.50,000 வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் அறிவித்தது தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி. இந்த முடிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தற்போது அந்த நிபந்தனையை மாற்றி அறிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. புதிய அறிவிப்பின் படி, நகரப் பகுதியில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முன்பு இருந்த ரூ.10,000 இருப்புத் தொகையை விட ரூ.5,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரை நகர்ப்புறங்கள் எனப்படும் இரண்டாம் கட்ட நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், ஊரக பகுதிகளில் ரூ.10,000-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, பெரும்பாலான வங்கிகள் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையை விதித்தாலும், சில பொதுத்துறை வங்கிகள் இதற்கு விலக்கு அளித்து வருகின்றன.
ஐசிஐசிஐ வங்கியின் இந்த அறிவிப்பால், அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். எனினும், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையும் கிராமப்புற மக்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது. பல்வேறு வழிகளில் லாபம் காணும் வங்கிகள், ஏன் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடையே எழுந்து வருகிறது.
Read more: 2026 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…! மத்திய அரசு தகவல்