தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடிகை சதா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெருநாய்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக, குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து சுப்ரீம் கோர்ட் தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெல்லி நகரத்தில் தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நடிகை சதா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”8 வார காலத்திற்குள் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையையும் சாத்தியமற்றது. அரசாங்கத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேவையான நிதி இருந்த போதிலும், காலத்திற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக தெருநாய்கள் தான் இன்று தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக விலங்கு நல அமைப்புகள் தங்கள் சொந்த முயற்சியால் தெருநாய்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. மேலும், உணவுத் தேவைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சையை தங்களது சொந்த செலவிலேயே பார்த்துக் கொள்கின்றனர். நானும் இதேபோல் தெரு நாய்களுக்கு உதவி செய்து வருகிறேன். அரசு எந்தவிதமான உதவியும் வழங்குவதில்லை.
அதேபோல், வளர்ப்பு நாய்களை வாங்குவதன் மூலம் தெரு நாய்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு அழகான நாய் வேண்டும் என்பதற்காக தெருநாய்களின் வாழ்க்கையை புறக்கணிக்க முடியாது. அவர்கள் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை நீங்கள் பறிக்கிறீர்கள். அப்படி செய்பவர்கள் தங்களை விலங்கு நல ஆர்வலர் என அழைக்கக்கூடாது.
இந்த தீர்ப்பு ஒரு நாட்டுக்கே வெட்கக் கேடானது. இவ்வாறு திட்டமிட்டு கொலை நடவடிக்கைகள் நடக்கக் கூடும் என ஒருபோதும் நினைக்கவில்லை. இது முன்பே ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். விலங்கு நல அமைப்புகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். எனவே, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.