டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளில் சிலர் சக பயணிகளை கூசச் செய்யும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அரைகுறை ஆடையுடன் நடனம், ஆபாச செயல்பாடுகள் என டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி செயல்கள் நடக்கின்றன.
இந்நிலையில், ஆனந்த் விஹார் இரயில் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று உதட்டோடு-உதடு முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல, முதியவர் ஒருவர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும்போது பீடியை பற்றவைத்து குடிக்க முயற்சித்தார். அங்கிருந்த பயணி அவரை கண்டித்து பீடியை அணைக்க வைத்தார். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைப் பார்க்கும் பயணிகள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மெட்ரோ பணியாளர்கள் அல்லது பாதுகாப்புப் பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அதன் சமூக வலைதளம் வழியாக, மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் யாரும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் எடுப்பது, ரீல்ஸ் உருவாக்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.