குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் டிவி, செல்போன் பார்ப்பது ஒன்றும் அபூர்வமானது அல்ல. ஆனால், இது ஒரு அபாயகரமான பழக்கமாக வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ஸ்க்ரீன் டைம் இல்லாமல் சாப்பிட மறுக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால், உண்மையில் இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீமைகள் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சாப்பிடும் போது குழந்தைகள் டிவி, செல்போனில் மூழ்கி இருக்கும்போது, உணவு செரிமானம் முறையாக நடக்காது. மூளை உணவில் கவனம் செலுத்தாததால், எப்போது பசி தீரும் என்பதை உணர முடியாது. இது பழக்கமாக இருந்தால், பின்னாளில் அதிகமாக சாப்பிடுதல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இளம் வயதில் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
உணவு என்பது சுவை, வாசனையை உணர்ந்து சாப்பிட வேண்டியது. ஆனால், டிவி பார்ப்பது மூலமாக அது தடைபடுகிறது. முதலில் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். குடும்பமாக சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது, அனைவரும் ஒரு மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடும் சூழல், குழந்தைக்கு உணவின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும்.
சிறிய வயதிலேயே குழந்தையின் உணவு பழக்கங்களை உருவாக்குகிறோம். அந்த நேரத்தில் எடுக்கப்படும் தவறுகள், அவர்களின் வாழ்நாளையே பாதிக்கக்கூடும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், அடுத்த முறை உங்கள் குழந்தை ‘டிவி போடுங்க, செல்போன் கொடுத்தால் தான் சாப்பிடுவேன்’ என்று அடம்பிடித்தால், பக்கத்தில் அமர்ந்து ஒரு கதை சொல்லுங்கள். உணவு ஒரு அனுபவம் என்பதை குழந்தைக்கு உணர்த்துங்கள். அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.